மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் காலையில் சுமதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெங்கடேஷ் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுமதி அக்கம்பக்கதினரின் உதவியுடன் வெங்கடேசனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு வெங்கடேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.