மதுவில் விஷம் கலந்து குடித்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பீர்முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்சு கனி என்ற மகன் இருந்துள்ளார். இவரது காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உசேன் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்சு கனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்சு கனி அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த சம்சுகனி மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு உசேன் பாத்திமா “ஏற்கனவே குடித்துவிட்டு வந்து வந்திருக்கிறீர்கள் மீண்டும் நான் பணம் தர மாட்டேன்” என மறுத்துள்ளார். இதனை தொடந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பாத்திமா மகன்களுடன் வீட்டிற்குள் இருந்துள்ளார். இந்நிலையில் சம்சுகனி தான் வைத்திருந்த மது பாட்டிலில் எலி மருந்தை கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாத்திமா மற்றும் அவரது மகன்கள் சம்சு கனியை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்சுகனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல் துறையினர் சம்சுகனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.