குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
இதனையடுத்து செல்வமணி தனது வீட்டில் அம்மா அன்னம்மாள் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி மாடியில் இருந்து இறங்கி வரும்போது திடீரென குடிபோதையில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வமணியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.