மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் பலர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை உடனடியாக மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பட்டுகானாபுதூர் கிராமத்தில் வசித்து வந்த மிந்து மண்டல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.