மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில் 5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை தயாரித்துக் கொண்டிருந்த முருகன் என்பவர் அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.