Categories
மாநில செய்திகள்

கொரோனா தாக்கத்தால் அதிரும் சென்னை; முக்கிய 6 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட் – சிறப்பு குழு அமைப்பு!

சென்னையில் கொரோனோவை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 767 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகள் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப முதலே இங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் 19ல் இருந்து 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தான் இந்த பாதிப்பானது இரட்டிப்பாகி உள்ளது. குறிப்பாக ராயபுரத்தில் இதுவரை 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 115 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது கிட்டத்தட்ட 60% ஆக உள்ளது. இதுபோல திருவிக நகரில் ஏப்., 18ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30ஆக தான் இருந்தது. ஆனால் தற்போது 169ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 78%ஆக அதிகரித்துள்ளது. அதனருகில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 75% ஆக உள்ளது. மேலும் தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் பகுதிகளிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆறு பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக உள்ளது. இங்கு கொரோனா பரவலை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு களப்பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது கூடுதல் கண்காணிப்பாளரும் ஐஏஎஸ் அதிகாரியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரியும் இணைந்து செயல்பட உள்ளனர். மேலும் சென்னையில் பரிசோதனைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தினமும் 1,500 பேருக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 2,000 பேருக்கு சோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் குறைந்த தூரத்திலேயே கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஹாட்ஸ்பாட் இல்லாத மற்ற பகுதிகளும் மூன்று பகுதிகளுக்கு ஒரு குழு என அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |