மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மத்திய அரசு 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் தமிழகம் வந்து இடங்களை ஆய்வு செய்தனர். இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு இதே நாளில் அடிக்கல் நாட்டினார்.
தோப்பூரில் மண் பரிசோதனை சுற்றுச்சுவர் மற்றும் துணை மின் நிலையம் அமைக்க திட்டம் என அடுத்தடுத்து பணிகள் வேகமாக நடந்தன. தொடக்கத்தில் தீவிரமாக நடைபெற்ற பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா முழுவதும் தொடங்கப்படவிருந்த ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நான்கு மருத்துவ மனைகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கையில் அடிக்கல் நாட்டி ஓராண்டு நிறைவடைந்த பின்பும் மதுரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றத்தைத் தருவதாக மக்கள் தெரிவித்தனர்.