மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அலுவலகத்தில் இருந்து காவலர்கள் அனைவரும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
புகார் அளிக்கும் பொதுமக்கள் வசதிக்காக அலுவலகத்திற்கு வெளியே சிறப்பு முகாம் போடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூரில் இருந்து ஆம்னி பேருந்தில் மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 27 பேரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.