Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்….!!

வைகையில் இரு கரை தொட்டு தண்ணீர் ஓடியும் கடந்த சில நாட்கள் தொடர் மழை பெய்தும் கூட, மதுரையின் முக்கிய நீர் நிலைகளில் கால் பங்கு தண்ணீர் கூட பெருக வில்லை. மதுரையின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் கண்மாய்கள் வறண்டு கிரிக்கெட் மைதானங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக ஒரு நாளில் மட்டும் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் 756 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்தது. இருப்பினும், மதுரையின் முக்கிய நீர் நிலையாக கருதப்படும் வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய் ஆகிய முக்கிய கண்மாய்களில் கால்பகுதி தண்ணீர் கூட இல்லாமல் பெரும்பகுதி வறண்டே கிடக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழைப் பொழிவு இருந்ததன் காரணமாக வைகை அணையில் ஓரளவு தண்ணீர் நிறைந்தது. இதுபோக மஞ்சளாறு அணையில் நிரம்பியதால் திறக்கப்பட்ட நீர் காரணமாகவும் ஓரளவு வகையில், இரண்டு கரை தொட்டு நீர் ஓடியது. இருப்பினும் மதுரையின் முக்கியமான நீர் நிலைகளில் கால் பங்கு நீர் கூட பெருகவில்லை. இதனால் நிலத்தடி நீரும் அதிகரிக்க வாய்ப்பில்லை.

வண்டியூர் கண்மாய்:

Image result for வண்டியூர் கண்மாய்:

மதுரையில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாய் அண்ணாநகர், செனாய் நகர், கோமதிபுரம், மேலமடை, அனுப்பானடி, வண்டியூர் தெப்பக்குளம், காமராஜர் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்மாய்க்குள் ஓரளவு குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டு இருந்தாலும், தண்ணீர் வரும் வரத்துக் கால்வாய்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வண்டியூர் கண்மாய் வறண்டே காணப்படுகிறது. இதனை பொதுப்பணித் துறையும் மதுரை மாநகராட்சியும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்லூர் கண்மாய்:

Image result for செல்லூர் கண்மாய்:

மதுரை மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாய்களில் செல்லூர் கண்மாய் முக்கியமானது. இந்த கண்மாயில் 48 லட்ச ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அந்த கண்மாயும் கால் பங்கு கூட நிறையவில்லை. செல்லூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணையில் இருந்து வரும் நீரானது குலமங்கலம், பூதகுடி, பனங்காடி, ஆனையூர், ஆலங்குளம், முடக்கத்தான் கண்மாய்களின் வழியே கடைமடையாக செல்லூரில் வந்து நிறைகிறது. இருப்பினும் செல்லூர் கண்மாய் செல்லா காசாகிப் போனதுதான் மிச்சம். இது ஒரு பக்கம் இருப்பினும் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் நெகிழி கழிவுகளால் நிரம்பி காணப்படுகிறது.

water bodies turned as cricket grounds in madurai

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மாடக்குளம், தென்கரை கண்மாய்களையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் இதே நிலைமை தான். மதுரையின் முக்கிய கண்மாய்களெல்லாம் தற்போது மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானங்களாய் மாறி வரும் அவலம் தான் அரங்கேறுகிறது. வைகையில் வெள்ளம் வரும் என்பது கனவாகி போனது போல இந்த கண்மாய்களை நீர் சூழம் காலம் வரும் என்பதும் கனவாகவே போகுமோ?

இது குறித்து தெரிவிக்கும் மதுரை மக்கள், “கண்மாயில் கரையை உயர்த்துதல், நீர்நிலையை ஆழப்படுத்துதல், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு செயல்பாடுகளை மிக சிறப்புடன் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வந்தாலும் கண்மாய்களில் வரத்துக் கால்வாய்களை சரி செய்தால் ஒழிய கண்மாய்க்கான நீர்வரத்தை உறுதி செய்ய முடியாது” என்ற ஒரே பதிலைத் தான் உச்சரிக்கிறார்கள். ஆகவே ஆக்கிரமிப்புகளை சரி செய்தால் மட்டுமே மதுரையின் முக்கிய நீர் நிலைகளான வண்டியூர், செல்லூர், மாடக்குளம், தென்கால் கண்மாய்களுக்கு விடியல் பிறக்கும். இல்லையேல் உள்ளூர்வாசிகளால் கிரிக்கெட் மைதானங்கள் தான் ஆகும்.

Categories

Tech |