இத்தாலியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு மாபியா கும்பல் உணவளித்து வருகிறது
கொரோனா பாதிப்பினால் பல நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலியும் இந்த தொற்றினால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. இத்தாலி பணக்கார நாடாக இருந்தாலும் அந்நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் அதிகம் உள்ளனர். அதிலும் தென் பிராந்தியங்களான கலப்ரியா, கம்பானியா, புக்கிலியா, சிசிலி போன்ற இடங்களில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் கூலித்தொழில் செய்து தங்கள் வாழ்வை நடத்தி வருபவர்கள்.
தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலை இன்றி, உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் இருக்கும் மாபியா கும்பல் ஆதரவளித்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்களின் வீடுகளுக்கு நேராகச் சென்று இந்த மாபியா கும்பல் மாவு, பாஸ்தா, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக கொடுத்து வருகின்றனர். மாபியா கும்பலின் செல்வாக்கு அதிகம் உள்ள இடங்களில் கடை வைத்திருப்பவர்களை வீடு வீடாக சென்று வினியோகிக்க கட்டாயம் செய்துள்ளனர்.
இதனை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் இந்த செயலை தொடர்ந்து அனுமதித்தால் எதிர்காலத்தில் இந்தக் கொள்ளைக் கும்பலை எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் இத்தாலிய அரசை எச்சரித்துள்ளனர். அதனை ஒப்புக்கொண்ட இத்தாலி உள்துறை மந்திரி இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். இருந்தாலும் மக்களின் வறுமை காரணமாக மாபியாவின் இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத சூழலே இருந்து வருகிறது. –