Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகள் மற்றும் 2 பேத்திகள் கொலை… தூக்கில் தொங்கிய பெண்…!!!

பட்டுக்கோட்டையில் மகள் மற்றும் 2 பேத்திகளை கொலை செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 50 வயதுடைய சாந்தி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால், கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகள் துளசி(21) மற்றும் அவரின் நான்கு வயது மற்றும் இரண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வளவன்புரம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். துளசி பட்டுக்கோட்டையில் இருக்கின்ற ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

அவரின் வீட்டில் வசித்து வரும் சாந்தி இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், வீட்டின் உரிமையாளர் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்ததால், அவர் வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அப்போது துளசி மற்றும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளும், சாந்தி வளர்த்து வந்த இரண்டு நாய்களும் தரையில் இறந்து கிடந்தன. அதே சமயத்தில் சாந்தியும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பின்னர் உடனடியாக அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சாந்தியின் உடலை மீட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், “சாந்தி முதலில் தனது மகள் மற்றும் 2 பேத்திகளும் விஷம் கொடுத்துவிட்டு, பாசத்துடன் வளர்த்து வந்த இரண்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் அவர்கள் இறந்த உடன், அனைவரின் உடல்களையும் வரிசையாக வைத்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சாந்தி உட்பட 4 பேரின் உடல்களையும் மீட்ட காவல்துறையினர்,  உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |