உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் வீட்டில் தற்கொலை செய்த நிலையில், குஷ்பூவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையில் சுசில் வர்மா தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலரான அனில் மீது புகாரளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குஷ்பூ வர்மா படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஸ்மிரிதி ராணி வர்மா, அனில் குமார் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மொராதாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர்.