மதுக்குடிப்பதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுக்கா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தனின் மகன் சூரியகோட்டி என்பவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்காததால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதில் தூக்கில் தொங்கிய அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரின் தந்தை லட்சுமிகாந்தன் தூசி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.