சொத்தை பிரித்து கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தில் விவசாயியான சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மார்க் டிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க் டிக்சன் தஞ்சாவூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்து அங்கு தனது தந்தையிடம் தன் சொத்துக்களை பிரித்துக் கேட்டுள்ளார். இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரகுமார் மார்க் டிக்சனை மண்வெட்டியால் தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த மார்க் டிக்சனை உடனடியாக மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மார்க் டிக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்திரகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.