குடும்பத்தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் செல்வி நகர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குருசாமி என்ற மகன் இருக்கின்றார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இதில் குருசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தினசரி குருசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் கலைச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த குருசாமியின் தந்தை முப்புடாதி அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த குருசாமி வீட்டில் இருந்த அரிவாளால் முப்புடாதியின் முகத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த முப்புடாதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குரு சாமியை கைது செய்தனர் .