சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறந்த அளவில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஈஷாவின் 26 ஆம் ஆண்டு சிவராத்திரி வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 22ம் தேதி காலை 6 மணி வரை விழா ஆதியோகி முன்னிலையில் நடைபெற உள்ளது.
சத்குரு முன் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பங்கேற்க உள்ளனர். தியானலிங்கதிற்கு நடத்தப்படும் பஞ்சபூத ஆராதனை யுடன் விழா தொடங்கி சத்குருவின் சத்சங்கம், தியானங்கள், பாரம்பரியமிக்க இசை நடனம் போன்ற நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய களைகட்ட உள்ளது விழா.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆதியோகியின் ஒரு வருட காலமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானமும் கொடுக்கப்பட இருக்கிறது. ஈஷா மஹாசிவராத்திரி விழா பல்வேறு மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.