சிவாலய ஓட்டம்
சிவாலய ஓட்டம் மிகவும் புகழ்பெற்றதாகும். சிவாலய ஓட்டம் என்பது மகா சிவராத்திரி அன்று 12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்று தரிசிப்பது தான் இந்த வழிபாட்டின் தனிச்சிறப்பாகும். குமரிமாவட்டத்தில் நிகழும் இந்நிகழ்வில் சிவபக்தர்கள் கோபாலா கோவிந்தா எனும் முழக்கத்துடன் கையில் விசிறியுடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. சுமார் 110 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை விரதமிருந்து சிவராத்திரி நாளன்று பக்தர்கள் ஓடிச்சென்று வழிபடுகின்றனர்.
வரலாறு
பஸ்மாசுரன் எனும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்துதாம் யார் தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆகிவிட வேண்டும் எனும் வரத்தைப் பெற்றான். வரத்தை பெற்றதோடு அல்லாமல் சிவனையே சோதித்துப் பார்க்க எண்ணி சிவனின் தலையில் கை வைக்க நினைத்து சிவனை நெருங்கினான் பஸ்மாசுரன். இதனால் சிவபெருமான் தன்னை காப்பாற்றிக்கொள்ள பகவான் விஷ்ணுவை அழைத்தபடி ஓடியுள்ளார். இதன் நினைவாகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் கோபாலா கோவிந்தா என்று அழைத்தபடி 12 சிவாலயங்களையும்ஓடியே சென்று வழிபடுகின்றனர். 12 சிவாலயங்கள் என்பது சிவன் ஓடி செல்கையில் அமர்ந்து இளைப்பாறிய இடம் ஆகும் எனவும் கூறுவர். பக்தர்கள் கையில் விசிறி வைத்திருப்பதற்கான காரணம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு வியர்வை வராமல் இருக்க வீசுவதற்கே பக்தர்கள் கையில் விசிறியை கொண்டு ஆலயங்களுக்கும் செல்கின்றனர்.
12 திருத்தலங்கள்
திருமலை மகாதேவர் கோவில்
திக்குறிச்சி மகாதேவர் கோவில்
திற்பரப்பு மகாதேவர் கோவில்
திருநந்திக்கரை ஸ்ரீ நந்தீகேஸ்வரர்
பொன்மனை ஸ்ரீ தீம்பிலேஷ்வரர்
பன்றிபாகம் ஸ்ரீ கிராத மூர்த்திஷ்வரர்
கல்குளம் ஸ்ரீ நயினார் நீலகண்டேஸ்வரர்
மேலான்கோடு ஸ்ரீ காலகாலர்
திருவிடைக்கோடு ஸ்ரீ சடையப்பர் (ஜாயப்பர்)
திருவிதாங்கோடு ஸ்ரீ பரசுபாணிஸ்வரர்
திருபன்றியோடு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர்
திருநட்டாலம் ஸ்ரீ சங்கர நாரயணர்