மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இங்கு 101 பேர் கொரோனா வைரஸால் பாதித்துள்ளதால் அம்மாநிலத்தில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும் மளிகை பொருட்கள், பால், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். மக்கள் பீதி அடையத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.