மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பலி எண்ணிக்கை 13 ஆக இருக்கிறது.
குறிப்பாக அம்மாநிலத்தில் இன்று மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு மாஸ்க் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பையில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் மொத்தம் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 149 பேர் பலியாகியுள்ள நிலையில், 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.