அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் திருவில்லா பகுதியை சேர்ந்தவர் மஜூ வர்கீஸ் என்பவர். இவர் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பரப்புரை காண தலைமை இயக்குனராக இருக்கிறார். மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை இவர் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோ பைடனின் துணை உதவியாளர் பொறுப்பும், வெள்ளை மாளிகையின் ராணுவ அலுவலக இயக்குனர் பொறுப்பும் வர்கீஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்கீஸ் வெள்ளை மாளிகையின் ராணுவத்தை மேற்பார்வையிடுவார்.
இவர் வெள்ளை மாளிகையில் பணிபுரிவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது அவருக்கும் இவர் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வர்கீஸுக்கு பலரும் தங்களது பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன.