பயிரை நாசம் செய்வதால் அரிசியில் விஷம் கலந்து மயில்களை கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூவல்குட்டை பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து ரமேஷின் விவசாய நிலத்துக்கு இரை தேடி அதிகமான மயில்கள் வந்து செல்கின்றது. அதன்பின் மயில்கள் நிலத்திற்கு வந்து மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் அதை கொள்வதற்காக அரிசியில் விஷத்தை கலந்து நிலத்தில் வைத்துள்ளார்.
இதனையடுத்து வழக்கம்போல அதிகமான மயில்கள் இரை தேடி அவரின் விவசாய நிலத்துக்கு வந்து விஷம் கலந்து வைத்திருந்த அரிசியை தின்றுள்ளது. பின்னர் அரிசியை சாப்பிட்ட அனைத்து மயில்களும் சுருண்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மயில்களை ரமேஷ் யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று புதைக்க முயன்ற போது யாரோ ஒருவர் பார்த்து விட்டு இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிரிழந்த மயில்களை மீட்டு ரமேஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மயில்களை விஷம் வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரமேஷை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனதுறையினர் ரமேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.