1. முற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு: (ஜனவரி 9)
அரசியல் சாசனப்பிரிவு 124இன்படி சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
2. புல்வாமா தாக்குதல்: (14 பிப்ரவரி)
ஸ்ரீநகரிலிருந்து காஷ்மீருக்கு மத்திய ஆயுத காவல்படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், ஓட்டிவந்த வெடிபொருள்களுடன் கூடிய கார் மோதி 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியனும் சிவசந்திரனும் உயிரிழந்தனர்.
3. பாலகோட் பதிலடியும் அபிநந்தனும்: (பிப்ரவரி 26)
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி பாலக்கோட்டிலுள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இரு நாள்களுக்குப் பின் (மார்ச் 1) விடுவிக்கப்பட்டார்.
4. மூதாட்டிக்கு இரட்டைக் குழந்தை: (செப்டம்பர் 5)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 74 வயதான எரமாட்டி மங்கம்மா என்ற மூதாட்டி தன் முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 1962ஆம் ஆண்டு இவருக்கும் ராஜா ராவ் என்பவருக்கும் திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத சூழலில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பிறந்தது.
5. சபரிமலை தீர்ப்பு: (நவம்பர் 14)
சபரிமலைக்கு 10 முதல் 50 வயது பெண்கள் செல்லத் தடை இல்லை என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்து ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தது.
6. முத்தலாக் குற்றம்: (ஆகஸ்ட் 1)
இஸ்லாமிய விவாகரத்து முறையான முத்தலாக் பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக இருப்பதாகக் கூறி மத்திய அரசால் ‘முஸ்லீம் பெண்கள் மசோதா’ எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
7. மீண்டும் பாஜக: (மே 23)
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11 தொடங்கி மே 19வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதன் முடிவு மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வென்று அபார வெற்றிபெற்றது. மேற்குவங்கம், ஒடிசா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களில் பாஜக வென்றது.
8. 16ஆவது பிரதமரான மோடி: (மே 30)
தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உள் துறை அமைச்சராகவும், ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிர்மலா சீதாராமன் நிதித் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
9. பாரம்பரிய தொகுதியை பறிகொடுத்த காங்.,: (மே 23)
அதிர்ச்சியளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். ஆனால், மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றதன் மூலம் மக்களவை உறுப்பினரானார்.
10. தார்மீகப் பொறுப்பேற்று விலகிய ராகுல்: (ஜுலை 3)
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
11. முன்னாள் முதலமைச்சரை வீழவைத்த சர்ச்சை நாயகி: (மே 23)
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய சிங்கை எதிர்த்து போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட, மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றிபெற்றார். கோட்சேவுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய இவர், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
12. அதிரடியும் ஜெகன்மோகனும்: (மே 23)
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதன் மூலம் ஜெகன்மோகன் முதலமைச்சரானார். ஒடிசாவில் பிஜு பட்நாயக் கட்சி வெற்றிபெற்றதன் மூலம் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
13. ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதிச் சட்டம் நீக்கம்: (ஆகஸ்ட் 5)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370, 35ஏ ஆகிய இரண்டு பிரிவுகளையும் நீக்கி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசு, அதனை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டு, மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டனர். பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் (அக்டோபர் 31) பிரிக்கப்பட்டது.
14. மறைந்த பாஜக தலைவர்கள்: (ஆகஸ்ட்6, 24)
பாஜகவின் மூத்தத் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகாரத் துறை அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார். முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்தத் தலைவருமான அருண் ஜேட்லி ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். மோடி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தாலும் ஜேட்லி ஒருமுறைகூட மக்களவைத் தேர்தலில் வென்றதில்லை.
15. திகாரில் சிதம்பரம்: (ஆகஸ்ட் 22)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைதாகி திகார் சிறையில் 106 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார். நீண்ட போராட்டத்துக்கு பின் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
16. விசா இன்றி பாக். செல்ல வழிவகுத்த கர்தார்பூர்: ( நவ. 12)
பாகிஸ்தானிலுள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவையும் பஞ்சாபிலுள்ள தேரா பாபா குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடத்தை, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதன்மூலம் கர்தார்பூர் வழித்தடத்தைப் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானிலுள்ள குருத்வாராவுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
17. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பு: (நவம்பர் 9)
இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அத்தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் மசூதி கட்ட மாற்று இடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
18. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான பாப்டே: (நவம்பர் 18)
உச்ச நீதிமன்ற தலைமை நீதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றார். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றதை அடுத்து, பாப்டே தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
19. தாக்கரே குடும்பத்தில் ’முதல்’ அமைச்சர்: (நவம்பர் 28)
பல அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்த மகாராஷ்டிரா அரசியல் களத்தின் சூடு, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ராஜினாமா செய்ததன் மூலம் தணிந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் இணைந்து அமைத்த மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியமைக்க உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்றார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சரானார்.
20. 21 நாள்களுக்குள் தூக்கு மசோதா: (டிசம்பர் 13)
கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த நான்கு குற்றவாளிகளை ஹைதராபாத் காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதன் எதிரொலியாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 21 நாள்களுக்குள் தூக்கு தண்டனை அளிக்கும் திஷா மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
21. பட்டியலினத்தவர்களுக்கான பிரதிநிதித்துவம்: (டிசம்பர் 10)
மக்களவை, சட்டப்பேரவைகளில் பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனித்தொகுதிக்கான இட ஒதுக்கீடு சட்டம் அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதியோடு காலாவதியாகிறது. அச்சட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
22. கர்நாடகா முதலமைச்சரான எடியூரப்பா: (ஜூலை 27)
2018ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றியதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன. ஆனால் 10 மாதங்களில் 17 உறுப்பினர்கள் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், பாஜக பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 12 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
23. நிர்பயா வழக்கும் மரண தண்டனையும்: (டிசம்பர் 18)
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து நான்கு குற்றவாளிகளும் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான்கு பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை அளிக்கப்படுமென்பதால் அவர்களுக்கு சிறையில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
24. குடியுரிமையை இழந்த 19 லட்சம் மக்கள்: (ஆகஸ்ட் 31)
அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பதிவேட்டில் சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தார், கார்கில் போர் வீரர் எனப் பல முக்கிய நபர்கள் உள்பட 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25. குடியுரிமை திருத்தச் சட்டம்: (டிசம்பர் 11)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்படாததால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியுள்ளன. கல்லூரி மாணவர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
26. மகாராஷ்டிராவில் வரலாறு காணாத வெள்ளம்: (ஆகஸ்ட் 7)
மகாராஷ்டிராவில் கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோலாபூர், சங்கிலி ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
27. என்.ஐ.ஏ.க்கு கிடைத்த கூடுதல் அதிகாரம்: (ஜூலை 17)
தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க இந்தச் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்துதல், கறுப்புப் பணம், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் என்ஐஏக்கு உட்பட்டதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டது.
28. அமலுக்கு வந்த உபா சட்டம்: (ஆகஸ்ட் 2)
தனிநபர் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் உபா திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. தனிநபர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டிருந்தால் மட்டுமே கைதுசெய்யப்பட்டுவந்த நிலையில், இப்போது திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் தனிநபர் எந்த அமைப்பிலும் தொடர்பில்லாமல் இருந்தாலும் பயங்கரவாதத் செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவர் கைதுசெய்யப்படுவார்.
29. அரைசதம் அடித்த பிஎஸ்எல்வி: (டிசம்பர் 11)
இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம், பிஎஸ்எல்வி வரலாற்றில் ஐம்பதாவது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதித்தது.
30. தேசிய மருத்துவ ஆணையம்: (ஆகஸ்ட் 1)
63 ஆண்டுகளாக இயங்கிவந்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தேசிய நிறைவு நிலைத் தேர்வு (NEXT) நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் போராட்டதில் ஈடுபட்டனர்.
31. நிறுத்திவைக்கப்பட்ட குல்பூஷன் மரண தண்டனை: (ஜூலை 17)
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்படை அலுவலர் குல்பூஷன் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
32. மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு: (அக்டோபர் 4)
இந்தியாவில் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு எதிராகக் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், மணிரத்னம், நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். நாட்டின் புகழைக் கெடுக்கும்விதமாக இவர்கள் கடிதம் எழுதியுள்ளதாகத் கூறி இவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது.
33. இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்திய விக்ரம்: (செப்டம்பர் 7)
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலமானது தனது பணியை 90 விழுக்காடு வெற்றிகரமாக செய்து முடித்திருந்தாலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் கடைசி நேரத்தில் கட்டுப்பாடின்றி நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையுமே சோகத்தில் ஆழ்த்தியது.
34. ரஃபேல் விவகாரம்: (நவம்பர் 14)
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
35. பாஜகவை வீழ்த்திய கூட்டணி: (டிசம்பர் 23)
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கடந்த 29ஆம் தேதி ஹேமந்த் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
36. அபாய நிலையில் தலைநகரம்: (நவம்பர் 4)
டெல்லியில் காற்றின் மாசு அபாய நிலையை தாண்டியதைத் தொடர்ந்து, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, டெல்லி அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஆட்-ஈவன் பார்முலா அமல்படுத்தப்பட்டது.
37. சசிதரூருக்கு சாகித்திய அகாதமி: (டிசம்பர் 18)
மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சசிதரூர் ‘An era of darkness’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக சாகித்திய அகாதமி விருதுபெற்றார்.
38. இணைந்த கோத்ரா கலவரத்தின் இரு துருவங்கள்: (செப்டம்பர் 6)
2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்திய புகைப்படங்களில் இடம்பெற்ற உயிருக்குப் பாதுகாப்பு கேட்கும் இஸ்லாமிய இளைஞரான குத்புதின் அன்சாரியும், கத்தியுடன் மிரட்டும் இந்து இளைஞரான அஷோக் பார்மரும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து இணைந்தனர். இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வானது, அஷோக் தன்னுடைய காலணி கடையை அன்சாரியை வைத்துத் திறந்ததன் மூலம் அரங்கேறியது.
39. செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் சோதனை வெற்றி: (மார்ச் 27)
விண்ணில் பயன்பாட்டில் இல்லாமல் சுற்றித் திரியும் நம்முடைய செயற்கைக்கோள்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ (Anti satellite missile) விஞ்ஞானிகளால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற செயற்கைக்கோள்களிலிருந்து எதிரி நாட்டவர்கள் நம்முடைய தகவல்களைத் திருடவும் வாய்ப்புள்ளதால் இச்சோதனை முயற்சி நடைபெற்றது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இச்சோதனையை மேற்கொண்டிருந்த சிலையில் நான்காவது நாடாக இந்தியா மேற்கொண்டு சாதனை படைத்தது.
40. மறைந்த மனோகர் பாரிக்கர்: (மார்ச் 17)
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதலமைச்சரும் பாஜக தலைவருமான மனோகர் பாரிக்கர் காலமானார். ரஃபேல் தொடர்பான ரகசிய தகவல் அடங்கிய கோப்புகள் இவரது படுக்கை அறையில் இருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
41. உன்னாவ் வழக்கில் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள்: (டிசம்பர் 20)
உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு, ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், 25 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
42. பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண் உயிருடன் எரிப்பு: (டிசம்பர் 6)
உன்னாவ் நகரில் நடைபெற்ற மற்றொரு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் கைதான ஐந்து பேரில் இருவர் பிணையில் வெளியேவந்திருந்தனர். பிணையில் வெளிவந்த இருவரும் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
43. தாக்கப்பட்ட மேற்குவங்க மருத்துவர்கள்: (ஜூன் 16)
மேற்குவங்கத்தில் இரு மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்தனர்.
44. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை: (டிசம்பர் மாதம்)
குற்றங்கள், அது குறித்து பதிவாகும் வழக்குகள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. 2017ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து நாடு முழுவதும் 3.5 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015, 2016 ஆகிய ஆண்டுகளைக் காட்டிலும் இது அதிகம்.
45. முப்படை தலைமை தளபதி பதவிக்கு ஒப்புதல்: (டிசம்பர் 24)
கார்கில் போர் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட முப்படைகளுக்கு தலைமை தளபதி பதவி உருவாக்கப் போவதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்தப் பதவியை உருவாக்க பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மற்ற மூன்று தளபதிகளுக்கு நிகரான அதிகாரம் பெறும் தலைமை தளபதி பாதுகாப்புத் துறைக்கும் அரசுக்கும் ஆலோசகராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
46. முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்: (டிசம்பர் 30)
கார்கில் ஆய்வுக்குழு பரிந்துரை செய்ததையடுத்து, முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவி உருவாக்குவதற்கு மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ராணுவ தளபதி பிபின் ராவத்தை முப்படைகளின் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.
47. தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பிக் பி: (டிசம்பர் 29)
இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இவர் மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் 12 பிலிம்ஃபேர் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
48. ஆக்சிஜன் பற்றாக்குறை வழக்கு – கபீல் கான் குற்றமற்றவர்: (செப்டம்பர் 27)
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த வழக்கில் மருத்துவர் கபீல் கான் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் கபீல் கான் குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு அரசு பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
49. அபிஜித்துக்கு பொருளாதாரத்துக்கான நோபால் பரிசு: (டிசம்பர் 10)
அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். உலக அளவில் வறுமை ஒழிப்புக்குப் பங்காற்றியதற்காக இந்த நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
50. பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் வெற்றி: (நவம்பர் 27)
ராணுவ பயன்பாட்டிற்கென தயாரிக்கப்பட்ட கார்டோசாட் -3 செயற்கைக்கோளையும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோளையும் தாங்கிய பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்தச் செயற்கைக்கோளானது பூமியிலுள்ள சிறிய பொருள்களையும் மிகத் துல்லியமாக காட்டும் திறன்கொண்டது. இது பயங்கரவாதிகளின் முகாம்களையும் பதுங்குகுழிகளையும் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும்.