பெண் வியாபாரியை அடித்து 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளதெருவில் சம்பத்- அலமேலு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அலமேலு தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து அலமேலு வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல் நடித்து பொருட்கள் சிலவற்றை கேட்டுள்ளார். அந்தப் பொருட்களை எடுப்பதற்கு அலமேலு முயற்சி செய்தபோது மர்மநபர் மக்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திடீரென அலமேலு முகத்தில் அடித்து தாக்கியதில் மயங்கி விழுந்து விட்டார்.
அதன்பின் மர்ம நபர் துணிச்சலாக அலமேலுவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து அலமேலு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தில் அலமேலு கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.