பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர் ஒருவர் பிச்சைகாரர் போன்று வேடம் அணிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மடிக்கணினி, செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் பயாஸ் புகார் கொடுத்துள்ளார்.
அதேபோன்று செட்டியப்பனூர் பகுதியில் சத்யா என்பவர் வீட்டில் ஏடி.எம் கார்டுகள், 20 ஆயிரம் ரூபாய், ஒரு பவுன் நகை கொள்ளை போனதால் பொதுமக்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுவரும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். அப்போது வாணியம்பாடி அடுத்த மாராபட்டு அருகில் சந்தேகத்தின்படி நின்ற வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதற்கு அவர் முன்னுக்கு பின்னாக தகவல்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரின் தொடர் விசாரணையில் அவர் உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலன் என்பதும் பிச்சை எடுப்பது போல் வேடமணிந்து வீடு வீடாக சென்று கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. அதன்பின் வேலன் கொடுத்த தகவலின்படி அவர் மறைத்து வைத்திருந்த மடிக்கணினிகள், ஏடி.எம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.