பொது தேர்வை ரத்து செய்தது போல் +1 வகுப்பில் பிடித்த குரூப்பை தேர்வு செய்ய அனுமதி வழங்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து முதலில் ஜூன் ஒன்றாம் தேதி தள்ளி வைக்கப்பட்ட தேர்வானது, பின் ஜூன் 15 க்கு மாற்றப்பட்டது. தற்போது தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூரில் பிரபல ஊடகம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில், மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பார்வையற்ற மாணவர்களும் 10 மற்றும் 11ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுத தயாராக இருந்தனர். ஆனால் பார்வையற்றவர்கள் தேர்வு எழுத வேண்டுமென்றால் அவர்களுக்கு அருகில் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பார்வையற்ற மாணவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே எழுத வேண்டும். இருவரும் மிக அருகில் அமர்ந்தால் மட்டுமே சொல்வதைக் கேட்டு தேர்வு எழுத முடியும். கொரோனா பரவக்கூடிய சமயங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.
ஆனால் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மாற்றுத்திறனாளியாக எங்களால் தேர்வு எழுத முடிந்திருக்காது. எனவே இந்த முடிவிற்கு வரவேற்ப்பை தருவதாக தெரிவித்தவர்கள், தேர்வு ரத்து செய்தது மகிழ்ச்சி அளித்தாலும், சிலர் அரையாண்டு, காலாண்டு தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பார்கள். எனவே மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பில் குரூப் தேர்வு செய்வதற்கு அனுமதிக்காமல், மாணவர்களுக்கு பிடித்த குரூப் ஐ தேர்வு செய்ய அனுமதி அளித்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.