இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும், கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அமமுக போட்டியிடவில்லை என்று நேற்றே அறிவித்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ‘ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவது மக்கள் நீதி மய்யத்தின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று விமர்சித்தார்.மேலும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று உறுதிபட தெரிவித்தார்.