தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் “தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சி செய்வது வருத்தத்தை தருவதாக” கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “நிதி அமைச்சரின் இந்த முடிவு சரியா தவறா என்பது ஒருபுறமிருக்க உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கொண்டு ஒரு மாநிலம் வளர்ந்த மாநிலமா இல்லையா என்று முடிவுக்கு வர முடியுமா என்பது கேள்வி இயல்பாக எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அரசு காப்பீட்டு திட்டங்களை பெரும் மக்கள் தொகை, தமிழகத்தின் வேலைவாய்ப்பு, தான் படித்த படிப்பிற்கு ஏற்றார் போல் வேலை செய்பவர்கள் மற்றும் நிதியமைச்சர் குறிப்பிட்ட நான்கு விஷயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளால் மேற்படிப்பிற்கு வெல்ல முடியாத காரணத்தினால் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் 52 சதவீத மாணவ, மாணவிகள் கல்லூரி செல்கின்றனர் என்று பெருமிதம் பேசுகிறோம். இதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் வசிக்கும் 90% பேருக்கு சொந்த வீடு இருக்கிறது. ஆனால் அவைகளுள் எத்தனை குடிசை வீடுகள், முறையான இடத்தில் இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள், கழிவறைகள் இல்லாத மற்றும் இவைகளில் லட்சக்கணக்கான வீடுகள் கடனில் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியுமா?.
மேலும் 66 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கின்றனர். இதில் எத்தனை பேர் கடனில் வாங்கியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் எத்தனை பேர் கடனை கட்ட முடியாமல் வண்டிகளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று புள்ளிவிவரம் நமக்கு தெரியுமா?.நாம் வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு, மகளிருக்கான இலவச பேருந்து, வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் இவையெல்லாம் எதற்கு. இதனை பற்றி எல்லாம் முழுமையாக பேசாமல் நகர்ப்புறத்தில் இருந்து ஒரு கருத்தினை சொல்வது எளிது. நாம் உண்மையாக தமிழகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் பைபாஸ் சாலை தவிர்த்து கிராமப்புறங்களுக்கு சென்று பார்த்தால் தான் 100 ரூபாய் கூலிக்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகள் நமக்குப் புரியும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சி செய்வது வருத்தத்தையே தருகிறது. மேலும் தமிழகத்தை வளர்ந்த மாநிலம் என்று சொல்வதன் மூலம் தேர்தல் அறிக்கையில் மக்கள் நிதி மையத்தில் இருந்து நகல் எடுக்கப்பட்டு பெரிதாய் காட்டப்பட்ட மகளிர் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் என்ற தேர்தல் அறிக்கையை செயல்படுத்தாமல் விட்டு விடலாம் என்ற எண்ணம் இருப்பதாக தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.