கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை பெற்றுக் கொண்டவர்களாக இருப்பினும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கனடா சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்றிருந்தால் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் பொழுது தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கடந்த ஜூலை மாதத்தில் அந்நாட்டு பெடரல் அரசு அறிவித்தது. இதனால் கனடா மக்கள் அவசர அவசரமாக விடுமுறை பயணத்திற்காக திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.
ஆனால் கனடாவில் இன்னும் வெளிநாடு செல்வது குறித்தான குழப்பம் தொடர்கிறது. மேலும் மக்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு கனடா அரசு இன்னும் பரிந்துரைக்கவில்லை. குறிப்பாக கனடாவில் பொது சுகாதார அமைப்பு கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால் முழுமையான தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளித்துள்ளனர்.
ஆனால் இன்னும் சில நாடுகளில் உருமாறும் கொரோனா தொற்று அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணத்தை மக்கள் தவிர்க்குமாறு கனடா அரசு கூறியுள்ளது. ஒருவேளை வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்பட்டால் தேவையின்றி நீண்ட நாட்கள் இருப்பது போன்ற சூழல் உருவாகிவிடும் என்றும் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து தொற்று நோயியல் நிபுணரான Nazeem Muhajarine தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கனடா மக்கள் வெளிநாட்டு பயணத்திற்கு திட்டமிடுவதற்கு முன்பாக தாங்கள் இருக்கும் இடத்திலும் தாங்கள் பயணம் மேற்கொள்ள போகும் இடத்திலும் கொரோனா பரவலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சான்றாக, நான் எனது பணி காரணமாக Mozambique நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பொழுது நான் எனது இருக்கும் இடத்திலும் போகக்கூடிய Mozambique நாட்டிலும் கொரோனா தொற்று பரவலின் நிலைமை மோசமாக காணப்பட்டதால் பயணத்தை ரத்து செய்து விட்டேன் என்றார். நாம் அனைவரும் தற்பொழுது கொரோனா பரவலின் நான்காவது அலையின் நடுவில் உள்ளோம். ஆகவே முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட போதிலும் பயணம் மேற்கொள்வது சரியானதல்ல.
மேலும் கனடாவை போன்று மற்ற நாடுகளும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகளை அனுமதிக்கின்றன. இருப்பினும் அந்த நாட்டில் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கும் அனுமதி உள்ளதா என்பதை பயணம் செய்பவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காப்பீடு வழங்குவதிலும் பல்வேறு விதிகள் இருப்பதால் அதனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆகவே இரண்டு தவணை தடுப்பூசி பெற்றவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும் வெளிநாடு பயணம் குறித்து திட்டமிடாமல் இவற்றை கருத்தில் கொண்டு தேவையில்லாத இன்னல்களை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.