திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் தன் மகனுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது, இன்னும் ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தமடைந்தார். அப்போது சக்திவேல் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருக்கு பழக்கமானார் .அவர் ஆறுமுகத்திடம் தனக்கு மாந்திரீகம் தெரியும் என்றும், பல பேருக்கு பரிகார பூஜைகளை செய்து கொடுத்துள்ளேன் என்றும் கூறினார்.உங்களின் மகனுக்கு குழந்தை இல்லை என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம். ஒரே ஒரு பரிகார பூஜை செய்தால் போதும். அதுவும் உங்கள் வீட்டில் செய்யக்கூடாது கடையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அதனை நம்பிய ஆறுமுகம் அவரது மனைவியுடன் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இன்று காலை 5 மணிக்கு அவர்கள் 3 பேரும் கடைக்கு சென்றனர்.தாங்கள் செய்யும் பூஜை வெளியில் தெரியக்கூடாது என்று கடையில் சென்றதும் அவர்கள் கடையின் ஷட்டரை மூடி கொண்டனர். அதன்பின் பூஜைகளை அவர்கள் தொடங்கினர். அதன்பின் ஆறு முகத்தையும் ஈஸ்வரியும் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது சக்திவேல் கூறினார். அப்போது சக்திவேல் திடீரென பூஜைக்காக கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.
இதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் காயத்துடன் கீழே மயங்கி விழுந்தார். அதன்பின் ஈஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10ஆயிரத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார். சிறிது நேரம் கழித்து காயத்துடன் மயங்கிக்கிடந்த ஆறுமுகம் மயக்கம் தெளிந்து பார்த்தார்.அப்போது அங்கு தன் மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்பு அவர் கடையின் ஷட்டரை வேகமாக தட்டினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து ஷட்டரை திறந்து பார்த்தனர்.
அப்போது ஈஸ்வரி இறந்த நிலையிலும், ஆறுமுகம் ரத்த காயத்துடன் இருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.சக்திவேலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெள்ளக்கோயில் பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.