தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளிக் கட்சி மக்கள் நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார்.
நேற்று ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள ராமதாஸ் திடீரென கூட்டணி தளங்களை சாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தேர்தல் நேரத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே இராமதாஸ் இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனி இட ஒதுக்கீடு குறித்த முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு புத்தாண்டில் போராட்டம் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி எதிர்வரும் தேர்தலில் மீண்டும் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி வாக்குகளை பெற ராமதாஸ் திட்டமிடுகிறார் என்று கணித்துள்ளார்.