மயிலாடுதுறை அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்மடைத்தன இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்தி மே மாதம் முன்னதாகவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. வயல்களில் தேங்கிய மழை தண்ணீரால் முழுவதும் மூழ்கியுள்ளது.
பல ஆண்டுகளாக அப்பகுதியிலுள்ள மேலையூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழை நீர் வடிய வழி இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகள் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி வந்து வயலில் உள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் நெற்கதிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண்மைத்துறை மூலம் சேதமடைந்த நெற்கதிர்கள் குறித்து கணக்கீடு நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.