தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் குழந்தை கோவிலுக்குச் சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேவபுத்திரன் அவரது உறவினர்களுடன் இணைந்து கோவிலுக்குச் சென்று தேடி பார்த்துள்ளார்.
ஆனால் அந்தக் கோவிலில் லட்சுமி தேவி மற்றும் மனிஷாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவபுத்திரன் மற்றும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.அந்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தோரணமலை கோவில் உச்சிக்கு சென்று பார்த்தபோது கீழே இளம்பெண் மற்றும் சிறுமியின் உடல்கள் கிடந்துள்ளது. அதனால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு மலையில் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு கீழே கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இறந்த உடல்களை பார்த்த தேவபுத்திரன் அதிர்ச்சி அடைந்து இறந்தவர்கள் தனது மனைவி மற்றும் குழந்தை தான் என்று உறுதிப்படுத்தி உள்ளார். அதன்பின் போலீசார் லட்சுமி தேவி மற்றும் மனிஷாவின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் லட்சுமி தேவியின் தந்தையான கேசவநேரி என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்.இதனால் லட்சுமி தேவி மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிந்தது.
இந்நிலையில் தனது கணவர் வீட்டிற்கு வந்தும் லட்சுமி தேவி மன வேதனையாக இருந்துள்ளார். இதனால் லட்சுமி தேவியின் கணவர் அவருக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். ஆனால் தனது தந்தையின் இழப்பை தாங்க முடியாத லட்சுமிதேவி தோரணமலை கோவிலுக்குச் சென்று வருவதாக குழந்தை மனிஷாவை அழைத்து சென்றுள்ளார். அப்போது லட்சுமி தேவி மற்றும் மனிஷாவும் தோரணமலை கோவிலின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு தாய் மற்றும் மகள் கோவில் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.