Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழையால் நாசமான நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!!

திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டு சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அதன் விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது பெய்துவரும் மழையினால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. அவைகள் அனைத்தும் நீரினால் நனைந்து கருமை நிறமாக மாற தொடங்கிவிட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தால் நெற்கதிர்கள் அனைத்தும் முளைக்கத் தொடங்கிவிடும். இதனால் நாங்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

கடந்த ஆண்டும் இதுபோல தான் ஆலங்கட்டி பெய்தது. அப்பொழுதும் வாழை, உளுந்து போன்றவை நாசமானது. அதற்கான உரிய இழப்பீடு கூட இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதும் மழையால் எங்களது நெற்பயிர்கள் நாசமாகியுள்ளது. எனவே இதனை அரசு கண்டுகொண்டு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறினர்.

Categories

Tech |