தொடர் கனமழை காரணத்தினால் தண்ணீர் நிரம்பி வழிகின்ற ஏரியை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் காரணத்தினால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் 3-ஆவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் பகுதியில் துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சரான ஆர்.காந்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் ஏரிக்கரையின் உறுதி தன்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல விவரங்களையும் மற்றும் ஏரிக்கு கால்வாய் மூலமாக நீர்வரத்து, ஏரியில் இருந்து கடை வாசல் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து ஏரியின் மூலமதகு பகுதியில் ஆய்வு செய்துள்ளார். மேலும் கடப்பேரி பகுதியில் இருக்கும் வரத்து கால்வாயை ஆய்வு செய்துள்ளார்.