Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த குளங்கள்…. ரூ 4.55 கோடியில் சீரமைக்கப்படும்…. அமைச்சர் நேரில் சென்று ஆய்வு….!!

கன்னியாகுமரியில் மழையினால் சேதமடைந்துள்ள குளங்களை சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தேரூர் குளம் உள்ளிட்ட  பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். எனவே அவரது அறிவுறுத்தலின்படி மழை நீரால் சேத மதிப்பு குறித்த வரைவுத்திட்டம் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேரூர் குளத்தில் சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறியபோது தாழக்குடி கிராமத்திலுள்ள பழையாற்றின் 6 -வது அணை க்கட்டான வீரநாராயணமங்கலம் அணைக்கட்டின் இடதுபக்கம் கரையில் தேரேகால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கின் மூலம் சேதமடைந்துள்ள தலைமதகு சட்டர், பாசன மதகுகள் சரி செய்யவும், கால்வாயின் கரை பகுதிகளை சரிசெய்யவும் 40 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பழையாற்றின்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேரேகால்வாயில் வெள்ளம் புகுந்து மாணிக்கப்புத்தேரிகுளம், தத்தையார்குளத்தில் முழு கொள்ளளவை எட்டி தேரூர் குளத்தில் உள்ள மிகைநீர் பழையாற்றில் கலந்து வருகின்றது.

இவ்வாறு வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்துள்ள குளங்களில் உபரி நீர் கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 4 கோடியே 55 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு செய்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு  முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வந்தவுடன் வெள்ளப்பெருக்கில் சேதமடைந்துள்ள குளங்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், நீர்வள ஆதார அமைப்பு சுகுமாரன், உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, உதவி பொறியாளர் ரமேஷ் ராஜன்  மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |