வீரமங்கை மலாலா யூசுப்சாய் திருமணம் குறித்து கூறியுள்ள கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
கல்வி உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கல்விக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான மலாலா யூசுப்சாய் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த மலாலாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் பூரண குணமடைந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்ததால் கடந்த 2014-ஆம் ஆண்டு அதாவது அவருடைய 17-வது அகவையில் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மலாலா அண்மையில் பிரிட்டன் பத்திரிக்கையான வோக் அட்டையில் இடம் பெற்றுள்ளார். அவருடைய அந்த படம் வைரலாக பரவி வந்துள்ளது.
அந்த இதழுக்காக மலாலா அளித்திருந்த பேட்டியில் தனது சொந்த வாழ்க்கையினை பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் திருமணம் குறித்து அவர் கூறியிருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மலாலா ஆண் துணை வாழ்வில் வேண்டுமானால் அதற்காக திருமண பேப்பர்களில் கையெழுத்து இட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது ஒரு பொறுப்பற்ற கருத்து என்று மலாலாவின் திருமணம் குறித்த கருத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.