ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல ஸ்பெயினில் 15,843 பேர், இத்தாலியில் 18,279 பேர், பிரான்ஸ் நாட்டில் 12,210 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் கடந்த 18 தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மலேசியாவில் இதுவரை 4,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்று மட்டும் 118 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,830 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தாக்கம் குறையாததால் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து, ஏப்ரல் 28ம் தேதி வரை மக்கள் வெளியே வரக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.