விருதுநகர் மாவட்டத்தில் தீயில் பாதி எறிந்த நிலையில் ஆண் சடலம் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்திற்கு பின்புறம் பாதி எரிந்த நிலையில் ஒரு பிணம் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி நாகசங்கர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு காணப்பட்ட ஆண் சடலத்தின் முகம் மற்றும் கை கால்கள் அனைத்தும் தீயில் கருகி இருப்பதால் யாரென்று அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பெருமாள், வருவாய்த்துறையினர் மற்றும் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்தது யார் என்பதும், இது கொலையா? தற்கொலையா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.