கனமழை காரணமாக ரயில்வே பணிமனையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே பணிமனைகுள் மழைநீர் புகுந்தது. எனவே பணிமனையின் மேற்கூரை ஒரு சில இடங்களில் சேதமடைந்து ஓட்டை உடைசலாக இருப்பதால் மழை நீர் நேரடியாக உள்ளே கொட்டி ரயில்வே பணிமனையில் உள்ளேயும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
இதனால் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இவ்வாறு பணிமனையில் சரக்கு ரயிலில் பழுதுபார்த்தல் மற்றும் ஒரு சில பணிகளை மேற்கொள்ள 50 கோடி ரூபாய்க்கு மேல் தளவாட எந்திரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரயில்வே பணிமனையில் மழைநீர் புகாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.