மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வெங்கடாசலம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் இன்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அருகில் கவிதா என்பவரது ஸ்வீட் கடையில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் கடையில் இருந்த 1 கிலோ இனிப்புகளை எடுத்து சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.