மளிகைக் கடையில் பணம் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் கடந்த 16-ஆம் தேதி விளாத்திகுளம் அருகில் உள்ள ஸ்டாலின் என்பவரது மளிகை கடையை உடைத்து ரூ.80 ஆயிரம் பணத்தை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் ராஜேந்திரன் விளாத்திகுளம்-எட்டயபுரம் மெயின் ரோட்டில் சித்தநாயக்கன்பட்டி அருகில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அனந்தராமன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்துள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மாவட்டங்களில் 44 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.