மளிகைக் கடையில் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் பகுதியில் சேர்மராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நபர் ஒருவர் சேர்மராஜ் மளிகைக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மளிகை பொருட்களை திருடி மூட்டையாக கட்டிக்கொண்டு நாச்சிபாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் காவல்துறையினர் அவினாசிபாளையம் காவல் நிலையத்திற்கு அந்த நபரை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், மேலும் அவர் சேர்மராஜ் மளிகை கடையில் பொருட்களை திருடி மூட்டையாக கட்டி கொண்டு சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மளிகை பொருட்களையும் மீட்டனர்.