பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாதுகாப்பு காரணம் கருதி இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்று அசத்தியது.தற்போது, இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் இருந்த இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின்மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான பனுக்கா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னான்டோ ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 48 பந்துகளில் 77 ரன்களும் மூன்றாவது டி20 போட்டியில் ஃபெர்னான்டோ 48 பந்துகளில் 78 ரன்களும் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மலிங்காவின் தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை அணி வீரர்களின் விவரம்: லசித் மலிங்கா (கேப்டன்), குசால் பெரேரா, தனுஷ்க குனதிலக, அவிஷ்க ஃபெர்னான்டோ, நிரோஷன் திக்வேலா, துசன் ஷனகா, ஸ்நேகன் ஜெயசூர்யா, பனுக்கா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னான்டோ, ஹசராங்க, லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமாரா, இசுரு உடானா, குசன் ரஜிதா.
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 27ஆம் தேதி அடிலெயிட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
Sri Lanka squad for Australia T20I series – https://t.co/nkoZFBVWbg #AUSvSL pic.twitter.com/0odvki60eY
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 17, 2019