முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தேடுவதாக குறைச்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்குவது தாங்கிக் கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகிறார். தற்போது கோரானா காலகட்ட சூழ்நிலை நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற எண்ணம் கடுகளவு கூட ஸ்டாலினுக்கு இல்லை. தன் குடும்பத்திற்காக மட்டுமே அரசியல் செய்கிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை.
நான் முதல்வர் ஆனதில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி கொண்டே தான் வருகிறார். திமுக ஆட்சியின் போது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக ரூ 200 கோடிக்கு கணக்குப் போட்டு பின்பு ரூ 475 கோடி தந்தார்கள். திமுக ஆட்சி ஆற்காடு- திருவாரூர், நாகை- கட்டுமாவடி சாலைகளில் முறைகேடு செய்து இருக்கிறது. ராமநாதபுரம்- தூத்துக்குடி வரையில் உள்ள சாலைகளிலும் முறைகேடு நடந்திருக்கிறது.
திமுக ஆட்சிக் காலத்தைப் போல டெண்டர் இல்லை; இப்பொழுது இ-டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் விடப்பட்ட திலும் திமுகவினர் அவர்களது ஆட்சியில் தில்லுமுல்லு செய்தனர். ஸ்டாலின் ஆல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சியிலும் டெண்டர் எடுத்தவர்கள் தான். தற்போது செயல்படுத்தப்படும் இ-டெண்டரில் எவ்வித தவறும் நடக்க முடியாது. பொய்யான தகவல்களை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை திமுக தேடுகிறது. என்று அவர் கூறினார்.