சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பூ சந்தையில் இன்று அதிகாலை முதல் கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
கொரோனா கால ஊரடங்கு தளர்வில் கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழம் மற்றும் பூ சந்தைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிக பூச்சந்தை செயல்படும் வானகரம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூச்சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
பூ வாங்க வரும் வியாபாரிகள் மழை நீரில் நீந்திச் சென்று பூக்களை வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயம்பேட்டில் பூ விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.