குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளையும், காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஜ்லூன் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முஷ்கான் என்ற மகள் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முஷ்கானுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷமீர் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷமீர் தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்துள்ளார். இந்நிலையில் இந்த குடும்பத்தினர் வேம்பள்ளி அணையை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் அணையில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஷமீர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பஜ்லூன் தனது மருமகனை காப்பாற்றும் நோக்கில் தண்ணீருக்குள் குதித்துள்ளார். ஆனாலும் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.