உயிரிழந்த மாமியாருக்கு கூட்டுக்குடும்பத்தில் வாழும் 11 மருமகள்கள் ஒன்றுசேர்ந்து கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சிவபிரசாத் தம்போலி – கீதா தேவி. இத்தம்பதியரின் வீட்டில் மகன்கள், மருமகள்கள் , பேரக்குழந்தைகள் என 39 குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அளவில்லா அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த குடும்பத்தினருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் கீதா தேவி. இக்குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமைக்கு காரணம் கீதா தேவி தான்.
தனது மனைவி குறித்து சிவபிரசாத் கூறுகையில், வருங்கால சந்ததிகளுக்கு நல்ல பண்புகளையும் மதக் கோட்பாடுகளையும் எனது மனைவி கற்றுக் கொடுத்துள்ளார். அவர் கற்றுக்கொடுத்த நற்பண்புகள்தான் குடும்ப ஒற்றுமைக்கு அடிப்படையாக உள்ளது”. உடல்நல குறைபாடு காரணமாக கீதா தேவி கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் சிவபிராசத்தின் குடும்பத்தை சேர்ந்த 11 மருமகள்களும் ஒன்று சேர்ந்து மாமியாரை கடவுளாக நினைத்து கோவில் கட்டி தினமும் வழிபட்டு வருகின்றனர்.