கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்குகின்றனர். தற்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் பல பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் காவல்துறையினருக்கு வில்லிவாக்கம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் செங்குட்டுவன் என்பதும், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் செங்குட்டுவனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 30 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.