தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பெண் குளித்துக் கொண்டிருப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண் தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே திடீரென யாரோ இருப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பெண் கதவு இடுக்கு வழியாக பார்த்த போது வெளியே ஒரு வாலிபர் நின்றிருந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் தனது செல்போனில் இந்த பெண் குளிப்பதை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அதன்பின் அச்சத்தில் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரியும் புவனேஸ்வரன் என்ற வாலிபர் தான் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புவனேஸ்வரனை கைது செய்த காவல்துறையினர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.