அமெரிக்க நாட்டில் லிசா பேன்ஸ் என்ற பிரபலமான நடிகை மீது இருசக்கர வாகனத்தை மோதி கொன்று விட்டு தப்பிச்சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த நடிகை லிசா பேன்ஸ்(65), ஹாலிவுட்டில் Cocktail, Gone Girl போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது வரை 80 க்கும் அதிகமான படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி அன்று நியூயார்க் நகரின் சாலையை கடந்து சென்றிருக்கிறார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார். இதில், லிசா பேன்ஸிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று, சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக பலியானார். இதற்கு காரணமாக இருந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி பிரையன் பாய்ட் என்ற 26 வயது இளைஞர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.